×

18ம் கால்வாய் தண்ணீர் வருவதற்காக வடத்தான்குளத்திற்கு புதிய நீர்வரத்து கால்வாய் அமைப்பு-போடி அருகே விவசாயிகள் அசத்தல்

போடி : போடி அருகே, சிலமலை ஊராட்சியில் 8 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி நிலத்தடி நீரை அதிகரிக்க, 80 ஆண்டுகளுக்கு முன் ஊர் பொதுமக்கள், ஊரின் கிழக்குப்புறம் காமாட்சியம்மன் கோயில் அருகே ராசிங்காபுரம் சாலையில், 25 ஏக்கர் பரப்பளவில் வடத்தான்குளம் அமைத்தனர். மழை காலங்களில் குளத்தில் தண்ணீர் தேங்கினால் சுற்றுப்புறத்தில் உள்ள 400 கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இக்குளத்திற்கு பொட்டிப்புரம் காமராஜ் தயாள சமுத்திரம் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், ராசிங்காபுரம் கால்வாய் வழியாக வடத்தான்குளத்திற்கு வரும். இந்நிலையில், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், நீர்வரத்து இல்லாமல் குளம் வறண்டு புதர்மண்டியது. இதனிடையே, 18ம் கால்வாய்த் திட்டத்தை சங்கராபுரத்திலிருந்து நீடிப்பு செய்தபோது இக்குளத்தை மறந்தனர். இதன் மூலம் பாசன வசதி பெற்ற நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. இந்நிலையில், குளத்தின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், வடத்தான் குளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் வருவதற்காக புதிய நீர்வழித்தடம் அமைக்க, கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து ரூ.1000, 2000 என ரூ.4 லட்சம் நிதி திரட்டினர். இதன் மூலம் மணியம்பட்டி ஊராட்சி சப்பாணி குளத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு வடத்தான்குளம் வரை புதிய நீர்வழித்தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணி நேற்று முன்தினம் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகின்றனர். இது குறித்து தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அவர் பணிகள் நடைபெறும் இடத்தை நேரில் பார்த்து, பொதுப்பணித் துறையிடம் பேசி, விரைவில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்’ என்றார்…..

The post 18ம் கால்வாய் தண்ணீர் வருவதற்காக வடத்தான்குளத்திற்கு புதிய நீர்வரத்து கால்வாய் அமைப்பு-போடி அருகே விவசாயிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : 18th canal ,Vadathankulam ,Bodi ,Silamalai panchayat ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...